சி.வி.சண்முகமும் அவரது அண்ணணும் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வருகிறார்கள்

Published: 16/06/2026 08:08 AM Updated: 16/06/2026 08:08 AM
Ads
news-banner

அதிமுக சட்டமன்ற கொறடாவும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமியால் வழிநடத்தப்படக்கூடிய அதிமுகவிலிருந்து எந்த தொண்டர்களும் எந்த கட்சி பக்கமும் செல்லவில்லை, அதுமட்டுமின்றி சிவி.சண்முகம் தொடர்ந்து அதிமுக, திமுகவுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தவறான கருத்தை தெரிவித்து வருகிறார்.

2021 முதல் 26 வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட போது கூட திமுகவை கடுமையாக குற்றம் சாட்டி எதிர்த்தவர் எடப்பாடியார், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 196 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று தேர்தல் பரப்புரை செய்து திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் குறைகளை தோலுரித்துக் காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் இப்படிப்பட்ட நிலையில் அதிமுக தலைமை முதல் தொண்டர் வரை யாரும் திமுகவிற்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை சிவி.சண்முகம் உணர வேண்டும் என்றார்.

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட திமுகவுடன் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாக தவறான கருத்தை கூறி வருகிறார். அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா நாவடக்கத்தோடு பேச வேண்டும்.ஆணவத்தால் குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்கும் வேலையை நடத்தி வருகிறார். உங்களது தவறை திருத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அதிமுக உண்மையான தொண்டர்கள் கொதித்து எழுவார்கள்.

அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகளில் பாமக பிச்சையால் தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என சிவி.சண்முகம் கூறியுள்ளார்.

நாங்கள் பாட்டாளி மக்கள் கட்சியை மனதார ஏற்றுக்கொண்டு பொதுச் செயலாளர் கூட்டணியில் இணைத்தார். பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி போன்ற பல்வேறு கட்சிகளின் பெயரை கூறிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி தவறுதலாக தமிழக வெற்றி கழகம் என இரண்டு முறை கூறியது அங்கிருந்து அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் சுதாரித்துக் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட இயக்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியில் இணைத்தார். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் அவர்களுக்கு உரிய மரியாதை அளித்தார். சுமுகமான முறையில் கூட்டணி நடத்தி வந்ததால் கூட்டணி பலத்தால் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. மேலும் 6 இடங்களில் கூட்டணி கட்சி சார்பில் என அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது.

2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமக இல்லாத போது கூட எடப்பாடி தொகுதியில் நின்று எடப்பாடி பழனிச்சாமி 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றார் என கூறுவது தவறானது இவர்தான் விழுப்புரம் மாவட்டத்தில் தட்டு தடுமாறி வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை. 2016 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டபோது கூட எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் 96 ஆயிரம் வாக்கு வித்தியாசம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார்.

எந்த தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தட்டு தடுமாறி வெற்றி பெறவில்லை என்பதை உணர வேண்டும். 1972 முதல் இது நாள் வரை திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறவில்லை என்பததை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்றார்.

வடமாவட்டங்களில் வலுவான கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி தான் கூட்டணியில் இணைத்தார்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சிவி.சண்முகம் மட்டுமே வெற்றி பெற்றார். இவர் பரிந்துரை செய்த வேட்பாளர்களையே அதிமுக பொது செயலாளர் அறிவித்தார். ஆகவே சிவி.சண்முகத்திற்கு இந்த இயக்கத்தை பற்றி குறை கூற எந்த அருகதையும் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சிவி.சண்முகமே காரணம் என கடுமையாக குற்றம் காட்டினார்.

சிவி.சண்முகமும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வருகிறார்கள். குடும்ப ஆட்சி நடத்துபவர் சிவி.சண்முகம் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப ஆட்சி நடத்துகிறார் என கூறுவது தவறு என்றார். அம்மா பொது செயலாளராக இருந்த பொழுது உங்களுடைய மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது, எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பதவியை பிச்சையாக போட்டார். கழக அமைப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி வழங்கியது எடப்பாடி பழனிச்சாமி போட்ட பிச்சைதான் சிவி.சண்முகம் நாவடக்கத்தோடு பேச வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த பொழுதும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பொழுதும் அவரது மகன் எந்த அரசு நிகழ்ச்சியிலும், கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது. எடப்பாடி பழனிச்சாமியின் மகனை சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நாங்களே பார்த்தது கிடையாது என்றார்.

அதிமுக அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தலைமை கழகத்திற்கு அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டு பின்னர் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டம் கூட்டப்படும் என ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தான் கடந்த 13ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கருத்து கேட்டுள்ளார்.

இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர்களின் கருத்து கேட்ட பின்னர் தான் அதிமுகவின் செயற்குழு கூட்டமோ அல்லது பொதுக்குழு கூட்டமோ நடத்தப்படும். மாறாக சிவி.சண்முகம் உடனே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் செயற்குழு கூட்ட வேண்டும் என கூறி வருகிறார் செயற்குழுவில் 175 முதல் 200 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளார்கள். இதில் இதில் 5 பேர் 10 பேர் சிவி.சண்முகம் போன்றவர்கள் மட்டுமே பேச முடியும் மற்றவர்கள் கருத்து கூற முடியாது.

பொதுக்குழு உறுப்பினர்களான 3 ஆயிரம் பேரில் சிவி.சண்முகம் போன்றவர்கள் மட்டுமே கருத்து கூற முடியும் ஆகவே தான் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்னர் கழகத்திற்கு உழைத்த நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அழைத்து கருத்துகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எந்தெந்த மாவட்டத்தில் யார் யார் தவறு செய்தார்கள் என்பது குறித்து நடவடிக்கை எடுப்பார். விழுப்புரம் மாவட்டத்தின் புதிதாக ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டமே தற்போது புத்துணர்ச்சி பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் தனது கையை விட்டு போனதால் பொறுத்துக் கொள்ள முடியாத சிவி.சண்முகம் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்.

பொதுச் செயலாளர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிவி.சண்முகம் அவதூறுகளை பரப்பி வருகிறார். சிவி.சண்முகம் நீங்கள் திருந்திக் கொள்ள வேண்டும். சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக செயல்பட்டு வருகின்றது.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். அரசியல் என்றால் என்னவென்று தெரியாத தவெக அமைச்சர்கள் எல்லாம் இன்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் சட்டமன்ற கொரடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதால் சிவி.சண்முகத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கட்சிப் பதிவை பறித்த எடப்பாடியார் எதற்கும் துணிந்தவர். அதன் அடிப்படையில் தான் தவறு செய்தவர்கள் மீது அதிமுக பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்தார். 24 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். அதன் அடிப்படையில் தான் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளனர்.

அதிமுக என்பது மூழ்கும் கப்பல் அல்ல செங்கோட்டையன் போன்றவர்கள் நிதானமாக பேச வேண்டும் அவர்தான் மூழ்குகின்ற படகில் பயணம் செய்கிறார். அவர் வயதிற்கு தரம் தாழ்ந்து பேசுவது சரியில்லை என்று விமர்சித்தார்.

மரகதம் குமரவேல் அதிமுகவைப் பற்றி பேச தகுதியில்லை கையில் வைத்த மை காய்வதற்குள் கோடிகளைப் பெற்றுக் கொண்டு தவெக சென்றவர் தற்போது வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார். ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தும் விழுப்புரம் லைவ் பேக் மூலம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பேசினார்.

இந்த சந்திப்பில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இ.என்.நாராயணன், மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் தேவராஜன், பழனிராஜ், அருள், எம்.ஜி.அரங்கநாதன், கோவிந்தன் உள்ளிட்ட அஇஅதிமுகவினர் உடனிருந்தனர்.