கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published: 16/06/2026 07:35 AM Updated: 16/06/2026 07:35 AM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் முத்தகரம் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அ.எ.கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் ரா.சுப்பிரமணி, மாநில செயலாளர் ப.ஜெயராமன், மாநில துணைத்தலைவர் சா.சந்தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் என்சிசிஎஃப் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் விவசாயிகள் இடம் கொள்முதல் செய்த ரூ 247 கோடி தொகையை போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண்மை துறையில் உதவாத பயனில்லாத பழைய திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு உற்பத்தி மானியாக ரூ 20,000 ரூபாய் மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்புக்கு 2025-2026ம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விவசாயிகளினுடைய குரல் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கேட்காமல் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டி அவரது காதிற்கு விவசாயிகளுடைய குறைகள் அனைத்தும் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தின் சின்னமான விசில் உரக்க அடித்து  விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வரும் தமிழக அரசுக்கு விவசாயிகளினுடைய குரல் எவ்வாறு கேட்காமல் போனது நாங்கள் கேட்க வைக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலின் முன்பு 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து விசில் அடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுக்க விசில் சத்தமாகவே கேட்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முத்தகரம் பழனிச்சாமி,

விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் அரசாக தற்போதைய தவெக அரசு உள்ளதாகவும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு தற்போது பல்வேறு நிபந்தன்களை விதிப்பதாகவும், குறிப்பாக சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பெரிய விவசாயிகளுக்கு பாதி அளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், ஆனால் கோரிக்கை விடுத்தவர்கள் உடனடியாக தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், ஆனால் தமிழக முதல்வர் காதில் கேட்காதது போல மவுனமாக இருப்பதாகவும், இதனை தமிழக முதல்வர் சரி செய்யவில்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ம.இராமசாமி, எம்.விஜயராஜ், சி.அண்ணாதுரை, இரா.சீனிவாசன், கோ.பழனிவேல் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்துகொண்டனர்.